கொத்தமல்லி பயன்கள்- சித்தமருத்துவம்

இன்றைய காலத்தில் அதிகமாக துரித உணவு வகைகளை விரும்பி உண்ணுகிறோம். இந்த துரித உணவு வகைகள் நோய்களையும் துரிதமாக ஏற்படுத்திவிட்டு பலரையும் மருத்துவத்தை நாடுமாறு செய்கின்றன என்பதை அறியாமல் அதையே தேடி உண்ணுகிறோம். இதனால் உணவு செரியாமை, அசீரணம், பசியின்மை, வாந்தி, வாய்க்குமட்டல் போன்ற குறிகுணங்களால் பலரும் அவதிப்படுகின்றனர்.

அதிகரித்த பித்தமானது (பைல்) ரத்தத்தில் கலந்தால் ‘காமாலை’ நோய் ஏற்படும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இப்பித்தத்தை தணிக்கவே இயற்கை நமக்கு கொத்துமல்லி தாவரத்தை வழங்கியுள்ளது. இதற்கு ‘தனியா’ என்ற பெயரும் உள்ளது. ‘தனியா’ என்ற சொல்லுக்கு ‘தணியாத பித்தத்தையும் தணிக்கும்’ என்று பொருள்.


இதையே அகத்தியர் தன் ‘குணவாகடநூலில்’
‘கொத்துமல்லி கீரையுண்ணிற் கோர அரோசகம் போம், பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்’ என்று குறிப்பிடுகிறார்.

“தனியா விதை பித்தத்தைத் தணிக்கும்; வயிற்றைக் குளிர்விக்கும்; மலச்சிக்கலைக் கரைக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; கபத்தைக் கரைக்கும்; உடல் உரத்தைப் பெருக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; மலேரியாவைக் குணப்படுத்தும்; விஷத்தை முறிக்கும்; மயக்கத்தைப் போக்கும்; இரத்தத்தைச் சுத்தி செய்யும்; உடல் சூட்டைக் குறைக்கும்; வயிற்றுப் புண்களை ஆற்றும்; வாய்க்குப் புண்களை ஆற்றும்; எலும்பு முறிவுகளை விரைவாக ஆற்றும்; உடல் வலிமையை அதிகரிக்கும்” என்று கூறுகிறார்.

கொத்தமல்லி கீரை:

வைட்டமின் ஏ, பி, சி, சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், சருமத்தை ஆற்றவும், சீரண சக்தியை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.
விஷ முறிவுத் தன்மை கொண்டது, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அசைவ உணவுகளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.


100 கிராம் கொத்தமல்லி இலையில் 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மி.கி கால்சியம், 5.3 மி.கி இரும்பு, 4.7 கிராம் நார்ச்சத்து, 24 மி.கி வைட்டமின் சி மற்றும் 635 மி.கி வைட்டமின் ஏ உள்ளது. 11 அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளது.

சுக்கு மல்லி காப்பியானது தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்கியமான மாற்று ஆகும்.


குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் முற்றிலும் தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சுய மருந்துக்கும் முன் தயவுசெய்து சித்த மருத்துவரை அணுகவும்.