வயிற்றுப்புண்ணை குணமாக்கும் வெங்காயம் – சித்த மருத்துவம்

சாப்பாட்டுல என்ன ஒரே வெங்காயமா இருக்கு இன்றைக்கும் வெங்காய சட்னிதானா? அய்யோ அம்மா கண்ணு எரியுதே வெங்காயமா வெட்டுறீங்க? இவ்வாறு நம்மை புலம்ப வைக்கும் வெங்காயமே நம்மை பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்பதை சொன்னால் நம்புவீர்களா? இனி வெங்காயத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம்

நன்மைகள்

  • நம் சமையலில் முக்கியமாய் இருப்பது வெங்காயம் தான். வெங்காயம் என்பதை பிரித்தால் வெம்மை +காயம். வெம்மை என்பது உஷ்ணத்தை குறிக்கும் சொல். காயம் என்பது உடலை குறிக்கும். அதாவது நம் உடலின் உஷ்ணத்தை போக்கும் தன்மை உடையது.
  • இத்தகைய வெங்காயம் தரைகீழ் தண்டில் குமிழ் தண்டு வகையை  சார்ந்தது. இதன் குமிழ்தண்டின் சதைபற்றுள்ள செதில் இலைகளில் ஆவியாகும் நறுமண எண்ணெயும் அங்கக சல்பைடும் உள்ளது.
  • வெங்காயச் சாற்றில் மோனோசாக்கரைடுகள் மற்றும் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன.
  • பயன்படுத்தப்படும் வெங்காய சாற்றின் அளவு 10-20மிலி. வெங்காய வித்தின் அளவு 1-3கிராம் வரை பயன்படுத்தபடுகிறது.
  • கசப்பு சுவையும் காரதன்மையுமாய் இருக்கிற வெங்காயத்தில் அலிசின் என்ற வேதி பொருள் உள்ளது.
  • ஆன்டிக் ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள  குர்சிட்டின் என்ற பிளவனாய்டு இதில் அதிக அளவில் உள்ளதால் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் உள்ளது.
  • வெங்காயத்தில் உள்ள ‘அல்லில் சிஸ்டின் சல்ஃபாக்சைடு’ எனும் வேதிப்பொருள் கணையத்தில் இன்சுலின் சுரைப்பை இயற்கையாக தூண்டக் கூடிய தன்மை கொண்டது. மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை குடலில் உட்கிரப்பதை தடுத்து சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
  • வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரித்து இயற்கையாகவே விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஆண்களின் பிறப்பு உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து ஆண்மையையும் அதிகரிக்க செய்கிறது.
  • பலாண்டு எனும் வேறுபெயரும் இதற்கு உள்ளது. அதாவது பல ஆண்டுகள் ஆரோக்கியமாய் வாழ உதவுகிறதால் இந்த பெயர் பெற்றுள்ளது. மேலும் பிரித்தால்  பலம்+ஆண் என்று வரும் அதாவது ஆண்களுக்கு பலத்தை அளிக்க கூடியது என்று பொருள்.

பிற பயன்கள்

  • பச்சை வெங்காய கிழங்கை தின்ன பெண்களின் சூதகதடையால் (amenorrhoea) உண்டான குருதி சிக்கல் தீரும்
  • வெங்காயத்துடன் 2-3மிளகு கூட்டி உண்ண குளிர்சுரம் சளி இருமல் தீரும்
  • வெங்காயத்துடன் உப்பு சேர்த்து உண்ண வயிற்றுவலி குருதியழல்நோய்(ஹைபர்டென்ஷன்) போகும்.
  • குடிநீரிட்டு குடிக்க நீர்கட்டு முதலிய சிறுநீர் பிரச்சனைகள் தீரும்.
  • சின்ன வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி உண்டுவர உடலில் உண்டாகும் வெப்பம் தணிந்து ஆசனகடுப்பு பைல்ஸ்  குணமாகும்
  • இதை சாம்பலில் வேகவிட்டரைத்து கரையாதகட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டிகள் உடையும்…
  • கிழங்கின் சாற்றை முகர மூர்ச்சை குணமாகும்.
  • காதில் 2-3 துளிவிட காதுநோய்கள் நீங்கும்.உடலின் மேல் பூச பூச்சிகடிகளாலும் தேள் கொட்டல் இவைகளால் உண்டாகும் வலி எரிச்சலை தணிக்கும.்
  • கடுகு எண்ணெயுடன் கலந்து கீல்வாதத்திற்கு போட குணமாகும்.
  • புகையிலையால் உடலில் உண்டாகும் நச்சை நீக்குகிறது.
  • வெங்காய விதையை உலர்த்தி பொடி செய்து சர்க்கரையுடன் கலந்து ஒருவேளைக்கு காலை மாலை 3 முதல் 4கிராம் வீதம் உண்டுவர வயிற்றுபுண் குணமாகும். ஆண்மை உண்டாகும். இதையே வெங்காய வித்து குன்மம் வீட்டும் என மூலிகை குணபாட நூலில் கூறுகிறது.
  • இஞ்சி சாறு மற்றும் வெங்காயத்தை (ஒவ்வொன்றும் 10 கிராம்), ஒன்றாக கலந்து கொடுக்க குமட்டல், வாந்தி, செரியாமை குணமாகும்.
  • வெங்காயம் மற்றும் பூண்டினை தினமும் 50 கிராம் அளவில் கொடுக்க இன்சுலின் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  • இரைப்பை குடல் அழற்சிக்கு வெங்காயச் சாற்றை 80 மி.லி அளவு எடுத்துக் கொண்டு வரலாம்.
  • தயிர் மற்றும் உப்புடன் கலந்து உண்ண, வயிற்றுபோக்கு தீரும்.
  • மேலும் வெங்காயமானது சிறந்த டையூரிடிக்காகவும், வலி நிவாரணி யாகவும், இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கான ஆண்டிபயாடிக் காகவும் பயன்படுத்தபடுகிறது.
  • இதன் விதைகளை தேனுடன் அரைத்து தோலில் வெளிப்புறமாகப் பயன்படுத்த தோலில் உண்டாகும் கரும்புள்ளிகள் தீரும்.

வெங்காய பூ

வயிற்றுசிறுநோயை வாதவலியை

உயித்தியஞ் செய்யாமல் ஓட்டும்-குயிற்றாத

சிங்கார கொங்கை செழுந்திருவே!நாட்டிலுறை

வெங்காயப் பூவெனவே விள்

அகத்தியர் அவரது குணவாகடநூலில் வெங்காய பூவை சமைத்தோ குடிநீராகவோ பொடியாகவோ உண்டு வர குடலை பற்றிய நோய்கள் மற்றும் குன்மநோய்களை நீக்கும். மேலும் பூவை கசக்கி சாறை கண்ணில் விட கண் மங்கல் தீரும்

வெங்காய பொடி

வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கிலே வெட்டி வைத்துக் கொள்ளவும். பின் வெயிலில் 5 நாட்கள் வரை நன்கு காய வைத்துக் கொள்ளவும். நன்கு மொறுமொறுவென்று ஆனபின்பு இடித்து பொடி செய்து கொள்ளவும்.

வெங்காய சட்னி

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிய பின்பு சிறிதளவு உளுந்தபருப்பு துவரம்பருப்பு போட்டு பொன்னிறமாய் வருத்து, பின்பு அதில் சிறிதளவு காய்ந்த மிளகாய் சேர்த்து அதனுடன் வெட்டிய வெங்காயத்தை போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின்பு சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பினை சேர்த்து அரைக்கவும். சுவையான வெங்காய சட்னி தயார். இதனுடன் தக்காளி மற்றும் பூண்டையும் சேர்த்து வைத்து அரைக்கலாம்

இத்தனை மகத்துவம் வாய்ந்த வெங்காயத்தை நம்மில் பலர் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். உணவிலும் பிரித்து வைத்து சாப்பிடுகிறோம். இனிமேலாவது வெங்காயத்தின் அருமையை உணர்ந்து சுவைத்து உண்போம். ஆரோக்கியமாய் வாழ்வோம்.

முக்கிய குறிப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சுய மருந்துக்கும் முன் தயவுசெய்து சித்த மருத்துவரை அணுகவும்.