தேங்காய் எண்ணெய் உதட்டிற்க்கு நல்லதா? சித்தமருத்துவம்

அழகை ரசிக்காத உள்ளம் இவ்வுலகில் உண்டோ?? தன்னைத்தானே அழகுப்படுத்துவதில் பெண்கள் முதல் ஆண்களும் ஆர்வமாய் உள்ளனர்.. இவ்வகையில் உதடானது ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு உள்ளது. ஆனால் பலருக்கும் உதடுகள் மென்மையின்றி, தோல் உரிந்து,வறண்டு பிளவுபட்டு கருப்பாக இருக்கும்.

உதட்டின் அழகு பாழாக காரணம்:

அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் உதடுகளை பாதிக்கின்றன. மேலும் அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து காணப்படும்.

உடலில் பித்தமானது அதிகரிப்பின் உதடானது கருமையாகும் என்கிறது சித்தமருத்துவம். மேலும் சித்த மருத்துவத்தில் உதடுகளில் உண்டாகும் நோய்களை பற்றியும் கூறுவதை பார்க்கலாம்.

உதட்டில் உண்டாகும் நோய் அறிகுறிகள்

  • வளி உதட்டின் பண்பு – வறட்சியுடன் சிறு பிளப்புகள் காணப்படும். 
  • அழல் உதட்டின் குணம் – இதில் உதடு மஞ்சள் நிறத்துடன் செம்மை கலந்திருக்கும். இதில் குருக்கள் தோன்றும். நாளுக்கு நாள் வேறுபட்டு,தோன்றிக் கொண்டேயிருக்கும்.
  • ஐய உதட்டினியல் – இதிற்றோன்றும் குருக்கள் சற்று வெளுத்திருக்கும். உதடு வீங்கும், புலால் நாற்றத்துடன் வெண்ணிறத்தையுடைய நீர் கசியும்.
  • முக்குற்ற உதட்டின் பண்பு – இந்நோயில் உதடு சில சமயம் வீங்கியும்,சில சமயம் வற்றியும் இருக்கும். கொப்புளங்கள் உருவ வேற்றுமையுடைதாயிருக்கும். இதினின்று கசியும் நீரானது மிக்க நாற்றத்துடன் விரைவில் ஆறக் கூடாத தன்மையுடையதாயிருக்கும். ஈதன்றி உதட்டில் சிறு சிறு பிளப்புகள் காணப்படும்.
  • சதை உதடுக் குணம் -இந்நோயில் உதடுதடித்து முற்றும்.புண்ணாய் விடும். அந்நிலையில் அது சதையை பாதிக்கும்.
  • நீருதட்டின் பண்பு – நீர்த்துளி போன்ற சிறு முளைகள் உதட்டின் மீது காணப்படும். சில வேளையில் அவைகளினின்றும் ஒருவித நீர் கசியும்.
  • மினுமினுப்பு உதட்டினியியல் – உதடு மிகவும் வீங்கி மினுமினுத்து இருக்கும். அதைக் கையால் சுரண்டுவதற்குப் பிரியமுண்டாகும்.
  • குருதியுதட்டின் குணம் – இப்பிணியில் உதடு வீங்கிச் சிவந்திருக்கும்.
  • குட்ட உதட்டின் பண்பு – உதடு தடித்து இயற்கை நிறமின்றி மாறுபட்ட வண்ணங்களைப் பெற்றிருக்கும். சிறு முளைகளும் பிளப்பும் இருப்பதுடன் செந்நீர் பெருகும்.

சித்த மருத்துவத்தில் உதட்டினை பாதுகாக்க மருத்துவ முறைகள்

ஈருள்ளியெண்ணெய் வெங்காயச்சாறு, நொச்சிச்சாறு, கற்பூரவள்ளிச் சாறு, எள்நெய் இவைகளுடன் வேப்பம்பட்டை, சீரகம், கருஞ்சீரகம், குக்கில், கீழ்க்காய் நெல்லி இவைகளைக் கற்கமாகச் சேர்த்துத் தைலங் காய்ச்சிப்பயன்படுத்த, சதை, நீர் உதடு ஆகிய இரண்டு நோய்களையும் குணப்படுத்தும்.

களிம்பு – துத்தம், குக்கில், இரசம், தாளகம் இவற்றை வெண்ணெயில் சேர்த்தரைத்துச் சுத்தித்துப் பின் உதட்டில் பூசலாம்.

உதட்டில் உண்டாகும் எரிச்சல் நீங்குவதற்கு

குக்கில் வெண்ணெயையேனும், வெண்ணெயையேனும், பசலைக் கீரையை அரைத்து வெண்ணெயுடன் கலந்தேனும் பூச மேற்கூறிய எரிச்சல் தணியும்.

உதட்டில் உண்டாகும் வறட்சி நீங்க

உதட்டில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் கிடையாது. அதனால்,குளிர்காலங்களில்  போதுமான ஈரப்பதம் உதட்டிற்கு கிடைக்காது. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதட்டிற்க்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது.

குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு,வெடிப்பு ஏற்பட்டு உதட்டின் அழகை பாழாக்கும். சிலர் அடிக்கடி உதட்டை ஈரப்படுத்த நாக்கு நுனியைப் பயன்படுத்துவர். அப்படி செய்யக்கூடாது. அது உதட்டின் அழகைக் கெடுத்துவிடும்..

நம் உதடு வறட்சியடையாமல் இருக்க தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இரவில் படுக்க செல்லும் போது தேங்காய் எண்ணெயால் சிறிது நேரம் உதட்டில் மசாஜ் செய்து வர வறட்சி நீங்கி உதட்டின் அழகை திரும்ப பெறலாம..

ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நமது சருமத்தினை ஈரப்பதமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவுகின்றன!..

அறிவிப்பு:

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் முற்றிலும் தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சுய மருந்துக்கும் முன் அருகிலுள்ள சித்த மருத்துவரை சந்தித்து அறிந்து கொள்ளவும்.