மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் பருவக்காலங்களும் மாறிக்கொண்டே வருவதை நாம் அறிந்ததே. இந்த பருவ மாற்றத்தால் சளி இருமல் போன்றவை உண்டாகி நம்மை பாடாய்படுத்துகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவதை பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதால்தான் இவர்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு உள்ளாகுகின்றனர். வழக்கமாக இருமலானது இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். இருமல் அதிகமானால் உடனே அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இருமல் என்பது என்ன
உடலில் ஐயம் (கபம்) குற்றம் அடைவதால் கோழையானது தொண்டையிலும், மார்பிலும் சேர்ந்து வெளியேற்றப்படும். பித்தமானது தொண்டை, மூக்கு, உண்ணாக்கு, நுரையீரல் முதலிய இடங்களில் சேருவதால், அங்கு புண் உண்டாகி அப்புண்ணில் இருந்து கசியும் கோழையானது நிணநீர், சளி போன்றவற்றை வெளியேற்றுகிறது. இதனால் உண்டாகும் ஒருவித ஒலியே இருமல் என்கிறோம். இந்த ஒலியானது, ஓட்டை வெண்கல பாத்திரத்தின் மீது தட்டினால் உண்டாகும் ஒலியை போல் இருக்கும்.
நோய் தோன்றும் வழி
- குளிர்காற்றில் அதிகமாய் இருத்தல்
- வெய்யிலில் அதிகமாய் அலைதல்
- மிக்க குளிர்ச்சியையும் சூட்டையும் தரும் உணவுகளை உண்டல்
- சத்தமாய் பேசுதல்
- மூச்சுகாற்று செல்லும் வழியில் தடை ஏற்பட்டாலும் இருமல் ஏற்படும்
- இரைப்பு இளைப்பு நுரையீரல் புற்று இதயம் சார்ந்ந நோய்கள்
- பனியில் படுத்துறங்கல்
- புகைப்பழக்கம் மது அருந்துதல் பழக்கம் இருப்பினும் இருமல் பிறக்கும்.
அறிகுறிகள்
சித்த மருத்துவ நூல்கள் இருமலின் பொதுவான குறிக்குணங்களாகக் கூறுவன
- மூக்கு,தொண்டை,மூச்சுக் குழல் ஆகியவைகளில் வெப்பம் உண்டாகும்.
- மூக்கில் நீர் வடியும்.
- கண் சிவக்கும்.
- சுரம் காயும்.
- தொண்டை கட்டும்.
- தலை கனக்கும்.
- மார்பு நொந்து இருமல் விளைவிக்கும்.
- வாய் ஓயாமல் இருமச் செய்யும்.
- கோழை,சளி வெளியாகும்.
- கோழை கடினப்பட்டு நுரையுடன் வெளியாகும்.
- மூச்சுத்தடுமாறும்.
- உடல்வன்மை குறையும்.
- முகம் கறுத்து,உதடு நீலநிறமாகும்.
- நோய் முதிர முதிர சளியானது சீழ் போல நாற்றத்துடன் வெளிப்படும்.
- மூச்சுத்திணறல் இருக்கும்.
- நாள் செல்லச்செல்ல ஐயத்தாது குறைந்து, உடல்வன்மை குன்றி, இருமலும் சளியும் அதிகமாகும்.
குற்ற முதலிய வேறுபாடுகள்
குளிர் காற்று, மழை, பனி மாற்றத்தாலும், குளிர்ச்சித் தரும் பொருள்களை அதிகமாய் உண்பதாலும், ஐயமானது தன்னளவில் மிகுந்து, தொண்டை, மூக்கு, மார்பு, காது, தலை இவைகளில் தங்கி, வெப்புற்று மேல் நோக்குக்காலான உதானவாயுவைத் தூண்டி இந்நோயைப் பிறப்பிக்கிறது.
நோயின் தன்மைக்குத் ஏற்றவாறு, நுரையீரலானது சிவந்து வீங்கி,கோழை உண்டுபண்ணுகிறது. இதனால் மூச்சு விடுவதற்கும் வாங்குவதற்கும் சிரமமாய் இருக்கிறது.
இருமல் அதிகமாக அதிகமாக உடல் வன்மையானது குறையும்.
நாடிநிலை
பங்கான வாதத்திற் சேத்தும நாடி பரிசித்தால்……… தீங்கான இருமலுடன்..(சதகநாடி நூல்)
சிலேட்டும நாடிதானே தெளிவோடு நிற்கிற் றீதாம்… சிலேட்டும மந்தம் பற்றில் சேர்ந்திடும் கோழையாமே (குணவாகட நாடிநூல்)
இருமலால் உண்டாகும் சிக்கல்கள்
அதிகப்படியான சளி சுவாச பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
- இரைபுபு (ஆஸ்துமா)
- மூச்சுத்திணறல்
- நுரையீரல் அழற்சி
- மூச்சுநுண்குழாய் அழற்சி
- இளைப்பு(காசநோய்).
- பீனிசம்
- மேல் சுவாச பாதை நோய் தொற்றுநோய்
- கீழ் சுவாச பாதை நோய் தொற்றுநோய்
வீட்டுமருத்துவம்
எதனால் இருமல் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை எடுக்கவேண்டும். பெரும்பான்மையான இருமல், சளி வைரஸ் தொற்றுகளால் உண்டாகிறது என்பதை அறிவோம். 200க்கும் மேற்பட்ட வைரஸ்கள் உள்ளன. அவை பொதுவாக தானாகவே அழிந்துவிடும் தன்மையுடையது. மேலும் இருமலைக் கையாளுவதற்கு வீட்டில் இருக்கும் மருந்துகளையே மக்கள் தேர்ந்து எடுக்கின்றனர். காரணம் எந்த பக்க விளைவுகளைக் இவைகள் கொண்டு இருப்பது இல்லை என்பதாலே. அதனால் நம்மை எதிர்கொள்ளும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் பின்பற்றும் சில வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு:
- மஞ்சள் மற்றும் சுக்கு (உலர்ந்த இஞ்சி)ஆகியவற்றை சம அளவு எடுத்து கஷாயமாக குடிக்கலாம்
- சிற்றரத்தை(அல்பினியா கலங்கா) ஒரு துண்டு மென்று சாப்பிடலாம்
- ஆடாதோடை இலைச்சாறு 10-20 துளி எடுத்து, தேனுடன் கலந்து கொடுக்கலாம்
- ஆடாதோடை இலைகளை இடித்து கஷாயம் தயாரித்து, தேன் கலந்து கொடுக்கலாம்.
- அதிமதுரத்தின் (கிளைசிரிசா கிளப்ரா) ஒரு துண்டு மென்று சாப்பிடலாம் வறட்டுஇருமலுக்கு சிறந்த மருந்து.
- ஆவி பிடிக்கலாம்.ஆவி பிடிப்பதால் கபம் சார்ந்தப் பிரச்சினைகள் குணமடையும்.
- வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
- துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு எடுத்து பின் அதில் தேன் கலந்து சூடாக்கி காலை,இரவு 5 மி.லி வீதம் கொடுக்கலாம்.
- தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
- தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும்.
- கொள்ளு ரசம், மிளகு ரசம் அடிக்கடி வைத்து உண்ண வேண்டும்
இரவு நேரத்தில் உண்டாகும் இருமலை குறைக்க செய்ய வேண்டியவை
இரவில் தூங்கும் போது சளியானது மூக்கின் பின்புறத்திலிருந்து தொண்டைக்குள் செல்வதால் இரவு முழுவதும் தொடர்ந்து இருமல் உண்டாகிறது. எனவே தலையை தலையணைகளால் உயர்த்தி வைத்தால் சளியானது தொண்டைக்கு வருவதை தடுத்து இருமல் வருவதை தவிர்க்கலாம்.
இருமலுக்கு சித்தமருத்துவம்
அதிகமான கபத்தை தன்னிலைப் படுத்தவும் கோழையை வெளியேற்றவும் மருத்துவம் செய்தல் வேண்டும். பொதுவாக கழிச்சல் வாந்தி மருந்துகளை கொடுத்த பின்பே நோய்களுக்கு மருந்தை கொடுப்பது நல்லது.
சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் இருந்தாலும் குறிப்பாக சளி, இருமல் குணமடைய தாளிசாதி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட இருமல் குணமடையும். ஆடாதோடை மணப்பாகு-5 மி.லி வீதம் காலை, இரவு இருவேளை கொடுத்து வரலாம். மேலும், தூதுவளை நெய் 5 மி.லி வீதம் இரவு சாப்பிடலாம். மேலும் தாளிசாதி வடகம் வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.
குழந்தைகளுக்குச் சளி கட்டி, இருமல், சுரம், மலச்சிக்கல், மூக்கில் நீர்ப்பாய்தல் ஆகியன இருப்பின்:
கோரோசனை மாத்திரை, சாந்த சந்திரோதய மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, மகாவசந்தகுசுமாகர மாத்திரை ஆகியவற்றில் ஏதேனுமொன்றைத் தேன் அல்லது தாய்ப்பாலில் தரலாம்.
தலைக்குத் தைலம்:
சுக்குத் தைலம், அரக்குத் தைலம் ஆகியன பீனிச இருமல் கண்டவர்கள்தலை முழுக உகந்த தைலங்களாகும்.
வரும் முன் காத்தல்
- புகைப்பிடித்தலைக் தவிர்க்க வேண் டும்.தூய்மையான உணவுப்பழக்கம்.
- யோகாசனம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை முறையாகச் செய்தல் ஆகியனவும் இருமல் நோயை வரும் முன் காக்கும் வழிகளாம்.
- தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, வாத, பித்த மற்றும் கபம் நிலைகளில் மாற்றம் ஏற்படுவதால் சுவாசக் கோளாறுகளில் சளி மற்றும் இருமல் ஆகியவை உண்டாகிறது. சரியான நேரத்தில் சிகிச்சைய அளிக்கப் படாவிட்டால், இது கடுமையான நோய்க்கு வழி வகுக்கும். சரியான நோயறிதல் இந்த சிக்கலை குணப்படுத்தும்.
- அந்த நேரத்தில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்தால், ஆரோக்கியம் தொடர்ந்து சீராக இருக்கும்.
முக்கிய அறிவிப்பு
நீண்ட நாட்களுக்கு இருமல் மற்றும் சளிக்கான அனைத்து வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யாதீர்கள். இந்த மருந்துகள் தகவல் மட்டுமே, ஒவ்வொரு நபரும் தனிப்பட்டவர்கள் மற்றும் வித்தியாசம் ஆனவர்கள்.எனவே ஒரு நபருக்கு ஏற்ற மருந்து மற்றவர்களுக்கு ஒவ்வாமையாக இருக்கலாம். எனவே இந்த முறைகளை முயற்சிக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள். தகுந்த சிகிச்சைக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
Dr. Augastina B.S.M.S., PGDY, is a passionate Siddha Doctor with a heart of gold. She believes in healing one step at a time. In her writing, you’ll find not just knowledge, but genuine care and a holistic approach to health and well-being.