கறிவேப்பிலை பயன்கள் சித்த மருத்துவ நன்மைகள்

நம் உணவில் தாளிப்பதற்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலருக்கும் பிடித்ததில்லை.. வெறும் மணத்திற்காக மட்டும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதாய் சிலர் நினைப்பர்.ஆனால். அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் நிறைந்த வேதிப்பொருள்களுக்கு, பல்வேறு உடல் உபாதைகளை சரிசெய்யும் தன்மை இருப்பதாலே நம் சமையலில் சேர்க்கிறோம் என்பதை அறிவோமா? கறிவேப்பிலை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

Rutaceae குடும்பத்தை சேர்ந்த கறிவேப்பிலயானது  அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது. இதன் மருத்துவ பெயர் Murraya koenigii ஆகும். இதன் இலை ஒரு வித நறுமணத்தைக் கொடுக்கிறது. இந்தியர்களுள் பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டில் செய்யப்படும் சமையல்களில் இதனைத் தாளிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

நன்மைகள்

பித்தத்தால் ஏற்படும் வயிறு வலி, மாந்தம், கழிச்சல், வாந்தி, நாக்கு ருசி இன்மை, நோய்களை உண்டாக்கும் பித்தத்தை கறிவேப்பிலை நீக்கும் என்று அகத்தியர் அவரது குணவாகட நூலில்

வாயினருசி வயிறுளைச்சல் நீடுசுரம் பாயுகின்ற பித்தமும் என்பண்ணுங் காண்-தூய மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற் கருவேப்பிலை யருந்திக் காண் என்கிறார்

மேலும் அதிகப்படியான பித்தமே, தலைமுடி நிறத்திற்கு காரணமான மெலனின் நிறமி சத்து குறைபாட்டையும், தோலில் சுருக்கங்களையும், கண்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என சித்த மருத்துவம் சொல்கின்றது.

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களுக்கு அதில் உள்ள ‘கார்பசோல் அல்கலாய்டு’ முக்கிய காரணமாக உள்ளது. இது செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீரேடிக்கல்களை அழித்து உடலுக்குள் நோய் தங்காமல் பார்த்துக்கொள்ளும். koenigin எனும் குளுக்கோசைடு இதில் உள்ளது

இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் ‘சி’ யும், வைட்டமின் ‘ஏ’-வின் ஆதாரமாகிய ‘பீட்டா கரோடீனாய்டுகள்’ அதிகப்படியாக இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. கண் மற்றும் தோல் முதுமையை தடுக்கிறது. மேலும் அதில் டெர்பினாய்டு, பிளவனாய்டு, பினோலிக் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன.

உடலியக்கத்திற்கு தேவையான கனிம உப்புக்களான இரும்புசத்து, கால்சியம் சத்து, பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளது. இதில் உள்ள இரும்பு சத்து மற்ற உணவுப் பொருள்களில் இருப்பதை விட உடலில் அதிக அளவில் சென்று சேருகிறது.இதனால் ரத்த சோகை நோய்க்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது

இதில் உள்ள இயற்கை நிறமிசத்துக்கள் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கிறது.

பயன்படுத்தும் முறைகள்

1. இதன் இலை, வேர், பட்டை, இவைகளைக் குடிநீரிட்டுக் கொடுக்க சுவையின்மை, சீதபேதி (dysentry) பழஞ்சுரம் நீங்கும்.

2.கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, அதனுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதவியவற்றை சேர்த்து பொடியாக்கிச் சோற்றில் கூட்டி கொஞ்சம் நெய்விட்டு கலந்து உண்ண மாந்தம், மாந்தபேதி, மலதோடம், மலக்கட்டு, கிரகணி இவைகள் குணமாகும்.

3. கறிவேப்பிலை ஈர்க்கிணையை தாய்ப்பால் விட்டு இடித்துச் சாறு எடுத்து கிராம்பு, திப்பிலி பொடித்து சேர்த்து 2 அல்லது 3 முறை குழந்தைகளுக்கு  கொடுக்க வாந்தி நிற்கும்.

4. கறிவேப்பிலை ஈர்க்குடன், வேம்பீர்க்கு, நெல்லி ஈர்க்கு சேர்த்து இடித்து நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

5. கறிவேப்பிலை சிறிது 2 அல்லது 3 மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து, வெந்நீர் விட்டு அரைத்து, கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்க மாந்தம் நீங்கி பசி உண்டாகும்.

6.கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி  தலையில் தேய்த்து வர இளநரை மாறும். முடி கருகருவென நன்றாக வளரும்.

7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலையை சாப்பிட்டு வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. மேலும் இரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

கறிவேப்பிலைப் பொடி:

கறிவேப்பிலை – 200 கிராம் (காய்ந்தது) கடலை பருப்பு – 2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கருப்பு எள் – 1 தேக்கரண்டி

கட்டிப்பெருங்காயப்பொடி – 1தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 5

எண்ணெய் விடாமல் தனித்தனியாக எள், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்புஆகியவற்றைச் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு கறிவேப்பிலையைசிறுந் தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். எள்ளைத் தவிர மற்றவற்றை மிக்சியில் பொடித்து பின்பு எள்ளைச் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.இப்பொடியை சாதத்துடன் கலந்து சிறிது நெய்விட்டு சாப்பிட நன்கு பசியை உண்டாக்கும். சுவையின்மை, அரோசகம்,மலக்கட்டு ஆகியன நீங்கும்.  பெண்களின் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பசியின்மை, வயிற்றுப் பொருமல், உணவு எதுக்களித்தல் போன்ற செரிமானத் தொந்தரவுகள் அதிகமாக உண்டாகும். இதை சரிசெய்ய கறிவேப்பிலை பொடியை சிறிதளவு எடுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். முக்கியமாக வயிறு சார்ந்த கோளாறுகளை முற்றிலும் தடுத்து சாதாரண வயிற்றுப்புண் முதல் குடல் புற்றுநோய் வரை தடுக்கும் தன்மையுடையது.

கறிவேப்பிலைத்துவையல்:

தேவையான அளவு கறிவேப்பிலை,

காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, இஞ்சி,

பொட்டுக்கடலை, ஆகியவற்றை வதக்கிஅரைத்துக் கொள்ளவும். இத்துவையலை இட்லி, தோசை, தயிர்சாதம் இவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.

கறிவேப்பிலை குழம்பு:

கறிவேப்பிலை – ஒரு கையளவு

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் – 15

புளி – எலுமிச்சங்காயளவு

மஞ்சள் தூள் – தேவையான அளவு

நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி

வெல்லம் – சிறு துண்டு

உப்பு – தேவையான அளவு

மல்லிப்பொடி – 3 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி – 1 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு

தாளிக்க தேவையான அளவு.

 புளியைக் கரைத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, கொத்தமல்லி பொடி, வெல்லம் இவற்றை கரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்து அதில் சின்ன வெங்காயத்தில் பாதியையும் பூண்டையும் வதக்கவும். பின்பு கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தில் மீதியையும் மிக்சியில் அரைத்து வாணலியில் இட்டு வதக்கவும். பின்பு கரைத்து வைத்த புளிக்கரைசலைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை வடகம்

மிளகு Piper nigrum

கொத்துமல்லி Coriandrum sativum

கிச்சிலிகிழங்கு Curcuma zedoaria

சாதிபத்திரிMyristica fragrans

உப்புSodium chloride

கறிவேப்பிலைMurraya koenigii

இவைகளை சம அளவு எடுத்து நீர் விட்டு அரைத்து ஒரு கிராம் அளவில் உருட்டி எடுத்து கொள்ளவும். பசியின்மை கழிச்சல் செரிமான பிரச்சனைகள் தீரும்.

சித்த மருத்துவத்தில் கறிவேப்பிலை சேர்ந்த மருந்துகள்:

1. கறிவேப்பிலைப் பொடி,

2. கறிவேப்பிலை வடகம்,

3.மதுமேகச் சூரணம் – சர்க்கர நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து.

கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பது மட்டுமில்லாமல் தினமும் சாப்ப்பிட்டு நோயில்லா வாழ்வைப் பெறுவோம்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் முற்றிலும் தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே.  எந்தவொரு சுய மருந்துக்கும் முன் தயவுசெய்து சித்த மருத்துவரை அணுகவும்.