தித்திப்பை தரும் முருங்கை – மருத்துவ பயன்கள் மற்றும் நன்மை தீமைகள் சித்த மருத்துவம் 

மனிதனின் நலமான வாழ்விற்கு அடிப்படை ஆரோக்கியமாக வாழ்வது ஆகும். இவ்வாழ்க்கையை பெறுவதே மனிதர்களாகிய நம் கடமை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம என்பதன் முலம் நாம் நோயற்ற வாழ்வை பெறவேண்டும். அத்தகைய நோயற்ற வாழ்வில் வாழ வழிவகுத்து தித்திக்கும் நலமான வாழ்வை தரும் மூலிகையில் ஒன்று முருங்கை

செய்கை

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாருமில்லை இந்த உலகில். பெரியோர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் முருங்கையில், ஏராளமான நன்மைகள் உள்ளன. அந்த வகையில் முருங்கையின் இலை, காய், பூ, பிஞ்சு, விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் உள்ளன. முருங்கையின் மருத்துவ பெயர் மோரிங்கா ஓலிஃபெரா

பொதுவாக  இதற்கு இசிவகற்றி (antispasmodic) கோழையகற்றி (expectorant) வெப்பமுண்டாக்கி (stimulant) சிறுநீர் பெருக்கி(diuretic) எனும் செய்கைகள் கொண்டது. இதன் பூவானது சூதகமுண்டாக்கி (emmenagogue )உரமாக்கி( tonic) செய்கையும் பட்டையானது கர்ப்பசிதைச்சி (Abortifacient) செய்கையும் உடையது.

முருங்கையின் குணம்

  • இலை-முருங்கை இலையால் மிக்க மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.
  • பூ- தீக்குற்றமும், சுவையின்மையும் நீங்கும். கண் குளிர்ச்சியும் உண்டாம். (சுக்கிலம்) வெண்ணீர் பெருகும். அகத்தியர் அவரது குணவாகட நூலில் கூறியது.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்

அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்

ஒருங்கையக லாககற் புடைவா ணகையே!

முருங்கையின் பூவை மொழி.

  • பிஞ்சு- பூப்பிஞ்சைச் சமைத்து தோலுடன் உண்ணில், என்புச்சுரம், எலும்பை உருக்குகின்ற வெப்பம், சுவையின்மை, விந்துநீரின்மை (தாதுநட்டம்) நீங்கும்.
  • விதை-வித்தினால், நீர்த்துப்போன வெண்ணீர் பிசின் போலாகும். உடல்வலுக்கும். இதன் இலையும், ஈர்க்கும் நீரைப் பெருக்கும்.
  • பட்டை-இதன் வேர்ப்பட்டையினால் ஐயமும், முப்பிணியும் மரப்பட்டையினால் வளிக்குற்றமும் சில நஞ்சுகளும் நீங்கும்.
  • பிசின்- இது மிகுதியாகப்போகும் சிறுநீரையும், மோரைப்போல ஒழுகுகின்ற விந்துநீரையும், வளிநோய்களையும் நீக்கும். வெண்ணீரை(விந்தை) இறுக்கி அழகை உண்டாக்கும். அகத்தியர் அவரது குணவாகட நூலில் கூறுகிறார்.

முந்துநீ ரைத்தடுக்கும் மோரைப்போ லேயொழுகும்

விந்துவைத்த டிப்பித்து மேனிதருந் – தொந்தக்

கரியநிற வாயுதனைக் காதிவிடு நாளும்

பெரிய முருங்கைப் பிசின்.

மருத்துவ பயன்கள்

  • நாய்க்கடி நஞ்சு நீங்க- இலையோடு, இரண்டு திரிப் பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து உள்ளுக்கு கொடுத்து வர, நாய்க்கடியினால் உண்டான நஞ்சு முறியும். இதையே புண்களின் மீதும் போட்டுவர, புண் ஆறி, நஞ்சும் நீங்கும்.
  • கண் வலி- இலை சாறை கண்ணில் விட, கண்ணில் உண்டாகும் வலிகள் நீங்கும். 
  • சிறுநீர் பெருக- இலைச் சாற்றுடன் சிறிது வெடியுப்புச் சேர்த்துக் கொடுக்க, சிறுநீர் பெருகும்.
  • தலைவலி நீங்க – முருங்கை இலையும் மிளகும் சேர்த்து, நசுக்கிச் சாறெடுத்துத் தலைவலிக்கு நெற்றியில் தடவிவரலாம். 
  • வாந்தி உண்டாக -இலைச்சாற்றை 36 கிராம் எடையாகக் கொடுக்க, வாந்தி உண்டாகும்.
  • வீக்கம் -இலையை அரைத்து வீக்கங்களின்மீது பற்றிட வீக்கம் குறையும்.

மற்ற பயன்கள்

  • பூவை இலேகியங்களில் சேர்த்து, உடல் வன்மைக்காகவும், ஆண்மைக்காகவும் பயன்படுகிறது.
  • பூவைக் காடியில் ஊறவைத்து ஊறுகாய்போல் வழங்குவதுண்டு.
  • பூவிலிருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்து, சமையல் பண்ணித் தோலுடன் சாப்பிட்டுவர, மிகுந்த வெப்பத்தைத் தணித்து ஆண்மையை உண்டு பண்ணும்.
  • காயைச் சமையல் செய்து சாப்பிடுவதுண்டு. பத்தியக் கறிகளிலும் இது ஒன்றாகும்.
  • விதையிலிருந்து ஒருவகை எண்ணெய் எடுக்கிறார்கள். இவ்வெண்ணெய் வலியை நீக்கும்.
  • இதன் விதை, கடுகு, சணல்விதை, பார்லி ஆகிய இவற்றை ஓர் அளவு எடுத்துத் தயிர் விட்டு அரைத்து கண்டமாலையின் மீது பூசி வர, நற்பயனைத் தரும்.
  • இதன் விதையானது மிகவும் நீர்த்துப்போன வெண்ணீரை கெட்டிப்படுத்தும்.
  • பட்டையைச் சிதைத்து, வீக்கங்கள் கட்டிகள் மீது வைத்துக் கட்டுவதுண்டு.
  • பட்டைச்சாறு, குப்பைமேனிச் சாறு இவ்விரண்டையும் சேர்த்து, எண்ணெய் விட்டுக் காய்ச்சி, கரப்பான், சொறி,சிரங்குகளின்மீது தடவ அவை நீங்கும்.
  • பிசினை எண்ணெயில் கரைத்துக் காதில் விடக் காதுப் புண் ஆறும்.
  • வேரின் சாற்றுடன் பால் சேர்த்துத் தக்க அளவாகச்சாப்பிட, விக்கல், இரைப்பு, கீல்வாயு,முதுகுவலி உள்ளுறுப்புகளின் வீக்கம், முதலியவை நீங்கும்.

தீமைகள்

ஆரோக்கியம் என்று ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொண்டாலும் அது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அளவுக்கு மீறி அருந்தினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கிணங்க ஒரு சிலருக்கு முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், வாந்தி, பேதியாகும்.

இதற்கான காரணம் முருங்கை இலையில் கேரட்டை விட வைட்டமின் ஏ, பாலை விட கால்சியம், கீரையை விட இரும்புச்சத்து அதிகம், ஆரஞ்சுப்பழத்தை விட அதிக வைட்டமின் சி, வாழைப் பழத்தை விட அதிக பொட்டாசியம், உள்ளது. இந்த முருங்கையானது பால் மற்றும் முட்டைகளுக்கு போட்டியாகவும் உள்ளதால் ஒரு சிலருக்கு செரியாமை ஏற்பட்டு கழிச்சல் வாந்தி உண்டாகும்.

முருங்கைக் கிழங்குக் குடிநீர்

முருங்கைக் கிழங்கு, கழற்சிவேர், சாட்டரணைவேர், வெள்ளுள்ளி, கற்றாழை, வசம்பு, சித்திரமூலம், பெருங்காயம் இவற்றை ஒரே அளவில் சேர்த்து குடிநீரிட்டுக் குடித்துவரில், வயிற்றுவலி நீங்கும். எளிமையான மருந்து ஆகும்.

ஒரு ஐம்பது கிராம் எள்ளு புண்ணாக்கு, ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை, ஐந்து வெற்றிலை, ஒரே ஒரு துண்டு சாதிக்காய் இவற்றை ஒன்றிரண்டாக உரலில் போட்டு இடித்து அதை அப்படியே கசாயம் செய்து அவித்து அதை ஒரு டம்ளர் தினசரி சாப்பிட்டுக்கொண்டே வருவோமானால் கால்சியம் சத்து குறைவினால் ஏற்படும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எலும்புகளை பலவீனப்படுத்துவதை தடுத்து எலும்புகளுக்கு வன்மையும் கொடுக்கும்.

முருங்கை கீரை பொரியல்

முருங்கை இலைகளைகளை தண்ணீரில் அலசி தனியாக வைத்து பின் ஒரு தடிமனான கடாயை எடுத்து, அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பின் அதை சூடாக்கி, எண்ணெய் கடுகு மற்றும் உடைந்த உளுத்தம்பருப்பு காய்ந்த சிவப்பு மிளகாயை போட்டு குறைந்த தீயில் வதக்கி பின் துருவிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறம் ஆனதும், கழுவி வைத்துள்ள முருங்கை இலைகளை போட்டுக் கொள்ளவும். பின் தேவையான உப்பு போடவும். முருங்கை இலைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், கீரைகள் மிக வேகமாக வெந்துவிடும்.

இந்த நிலையில் பருப்பைச் சேர்த்து, தொடர்ந்து திருப்பவும். பருப்பையோ அல்லது கீரையையோ பிசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக தேங்காய்த் துருவலைச் சேர்த்து, திருப்பிப் போட்டு நன்றாகக் கலந்து அணைக்கவும்.

இப்போது  முருங்கை கீரை பொரியல் ரெடி.

முடிவுரை

நோய் வந்த பின் சிகிச்சை பெறுவதை விட நோய் வரும் முன்காப்பதே சிறந்தது. அவ்வாறு இயற்கையின் கொடையில் கிடைத்த முருங்கை கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த காரணமாகவே நமது முன்னோர்கள் உணவு முறையிலும் சரி, மருத்துவ முறையிலும் சரி பயன்படுத்தினர்.

இம்முருங்கையை உணவில் கீரையாகவோ பொடியாகவோ கடையலாகவோ சேர்த்து உண்டு வருவதன் மூலம் சித்த மருத்துவமானது உணவு மருந்தாகிறது. இருப்பினும் இந்த முருங்கை கீரையை அதிகம் எடுத்து கொண்டாலும் சில பக்க விளைவுகள் உண்டாகும் என்பதை மறவாதீர்கள்.

குறிப்பு

இங்கு கூறப்பட்டுள்ள செய்திகள் மற்றும் மருந்து முறைகள் அனைத்தும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே. தகுந்த சிகிச்சைக்கு, மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

முருங்கையை உட்கொள்வதற்கு முன்,  நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ தாய்ப்பால் ஊட்டினாலோ அல்லது உடல் நலக் குறைபாடுகள் இருந்தாலும் மருத்துதுவரை ஆலோசிக்கவும்