படர்தாமரை (Ringworm) சித்த மருத்துவம்

படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒருவகை தோல் நோய் தொற்று. இது டெர்மட்டோஃபைட் (dermatophyte fungi of the genera Trichophyton and Microsporum) எனப்படும் பூஞ்சை தொற்றினால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

  • சுத்தமாக தேய்த்துக் குளிக்காத நபர்களின் இடுப்பு, தொடை இடுக்கு முதலிய இடங்களில் உண்டாகி தொற்றும்.
  • அதிக நமைச்சல் இருக்கும்.
  • நோய் கண்ட இடம் சிவந்தாவது கருமை நிறமுடனாவது வரம்புகட்டி எரிச்சல் காணும்.
  • சொறியச் செய்யும்.
  • சொறிந்தால் காந்தல் உண்டாகும்.
  • சில படைகள் தடித்த பனைமரப்பட்டை போல சுரசுரப்பாக இருக்கும்.
  • அதிகமானால் உடம்பில் கடுமையான சொரியாசிஸ் போன்ற அரிப்பை ஏற்படுத்தும்.

சித்த மருத்துவம்

இவற்றின் தன்மைக்கேற்ப மருந்துகளை வழங்க வேண்டும்.

  • தனித்த தேங்காய் நெய்யும் தடவலாம்.
  • அமிர்த வெண்ணெய், மிருதார்சிங்கிக் களிம்பு, வங்கக் களிம்பு, அருகன் தேங்காய் நெய், சிரட்டைத் தைலம், புங்கன் தைலம் ஆகிய வெளி மருந்துகள் பயன்படும்.
  • அமிர்த வெண்ணெய், சிரட்டைத் தைலம் இரண்டும் கலந்த படைக் களிம்பு போடலாம்.
  • வண்டுகொல்லி என்ற சீமை அகத்திச் சாறு பூசலாம்.
  • தகரை விதையை இலைக்கள்ளிச் சாற்றில் ஊறவிட்டெடுத்து பசுநீர் விட்டரைத்துப் பூசலாம்.
  • மருந்துகள் பயன்படுத்துகையில் எரிச்சல் கண்டு படை சினத்துச் சிவந்தால் அதை விட்டுவிட்டு குங்கிலிய வெண்ணெய் போன்ற மருந்துகள் தடவலாம்.
  • பறங்கிப்பட்டைக் கியாழம், சூரணம், கெந்தக இரசாயனம் முதலிய உள் மருந்துகளை கொடுக்கலாம்.

தடுக்கும் முறைகள்

  • கிருமிநாசினி கலவை நீர்களைப் பயன்படுத்தலாம்.
  • துணிகளை வெந்நீரில் நனைத்து வெயிலில் உலர்த்த வேண்டும்.

சித்த மருத்துவ குறிப்பு

தேங்காயி னெய்யதனாற் றியால் வருபுண் போம்
பாங்காகக் கூந்தற் படர்ந்தேறு-நீங்காத
பல்லடியின் னோயும் படர்தா மரைசிங்கும்
அல்லறப் போமென் றறி
                 அ.குணவாகடம்

  • தேங்காய் எண்ணெய் பூசுவதால் புண்கள் குணமாகும், கூந்தல் வளர்ச்சி மேம்படும், மற்றும் படர்தாமரை நீங்கும்.

தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவுகிறது?

  • தேங்காய் எண்ணெயில் உள்ள சில கொழுப்பு அமிலங்கள் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை பூஞ்சை செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அவற்றை அழிக்கக்கூடும். இருப்பினும், தேங்காய் எண்ணெய் படர்தாமரைக்கு ஒரு முழுமையான சிகிச்சை அல்ல

தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?

  • பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக கழுவி உலர வைக்கவும்.
  • சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும்.
  • ஒரு நாளைக்கு 2-3 முறை இதை மீண்டும் செய்யவும்.

குறிப்பு
இதுபோன்ற தோல் நோய் பிரச்சினைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான கைவைத்தியம் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது இந்த பிரச்சினைகள் குணமாக சாத்தியம்.
ஆனால் இவை தீவிரமாகும் போது உடனே மருத்துவரையும் அணுக வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *