சித்த மருத்துவமும் பெண்களின் மாதவிடாய் இரத்தக்கசிவும்

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வெளியேறும் இரத்தகசிவானது சாதாரண அளவிலும் அதிகரித்து இருப்பதை  சித்த மருத்துவத்தில் பெரும்பாடு என்கிறோம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வயிற்றுவலி ஏற்படும். மேலும் சூதகம் வெளியான பின் அதிக அளவில் இரத்தப் போக்கு இருக்கும்.

குழந்தை பிறப்பின் பின் பெரும்பாடு

கருச்சிதைவினால் உண்டாகும் இரத்த கசிவானது சிதைவடைந்த கருவின் பகுதிகள் யாவும் முற்றாக வெளியேறும் வரை குருதி வெளியேற்றம் காணப்படும், முறைப்படி செய்யப்படாத கருச்சிதைவின் போது  குருதி வெளியேற்றம் அதிகளவு ஏற்படுகிறது அத்துடன் கிருமித்தொற்று ஏற்படுவதாலும் உயிருக்கு ஆபத்தையும்ஏற்படுத்தக் கூடும். 

பொதுவான நோய் நிலைமைக்கு காரணங்கள் 

 • கருவுறுப்புகளில் ஏற்படும் தொற்றுகள்
 • தைராய்டு சுரப்பி அளவு மாற்றம்
 • இருதய ரோய்,
 • காச நோய்
 • கருப்பை சுவர்ப்படைகளில் கிருமித்தொற்று ஏதாவது உள்வளர்ச்சிகள்,
 • கருப்பைப் புற்று நோயின் ஆரம்பம்,
 • கருப்பைக் கழுத்துப் புற்று நோயின் ஆரம்பம்,
 • கருப்பையின் பாலியல் நோய்கள்
 • முறையற்ற கருக்கலைப்பு
 • கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துதலில் ஏற்படும் ஒவ்வாமை
 • கருப்பை அழற்சி மற்றும் இடம் பெயர்தல்
 • கடுமையான ரத்த சோகை
 • நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட தன்மை
 • மனஉளைச்சல்,
 • மாதவிடாயினால் பயம்,
 • கடினவேலை 

முதலியவைகளாலும் ஏற்படுகின்றது.

குறிகுணங்கள்

 • தலைவலி,
 • காதுவலி,
 • உடம்பு எரிதல்,
 • கீழ்வயிறு கனத்தல்.
 • மாதவிடாய் அதிகம் போதல்
 • உடல் சோர்வு,
 • அமைதியின்மை,
 • தலைச்சுற்றல், தண்ணீர்த்தாகம் மயக்கம் என்பன ஏற்படலாம்.

மங்கைப் பருவ காலங்களில் ஏற்படும் பெரும்பாடு :

சில மங்கையருக்கு முதற் பூப்பிலிருந்து சில மாதங்கள் வரை பெரும்பாடு ஏற்படுகிறது. பெரும்பாடு அதிகமாக இருந்தால் அய பற்ப செந்தூரங்களைக் கொடுக்கலாம். இன்னும் சிறுபான்மை யோருக்கு அபரிமிதமான பெரும்பாடு ஏற்படும். குருதி பரிசோதனையில் அய செந்தவளத்தின் கூட்டு விகிதம் மிகவும் குறைந்து காணும்.

பிள்ளைப்பேறு வயதில் ஏற்படும் பெரும்பாடு :

மாதவிடாய் சுழற்சி தொடர்ந்தும், ஒழுங்கற்றும் ஏற்படும். இக்காலங்களில் கருப்பையானது பருத்தும் கனத்தும் காணும். மிக முக்கியமாக ஒழுங்கற்ற பெரும்பாடு இங்கு உண்டாகும்.

ஒழுங்கற்ற பெரும்பாடு:

இவ்வகைப் பெரும்பாடு பூப்படைந்தது முதல் பூப்பு முடிவு வரையிலும் உண்டாகலாம். பெரும் பான்மையாக நாற்பது வயதிற்குப் பிறகு வரும். இருபது வயதிற்குள் சிறுபான்மையாகவும் காணும். இது கருச்சிதைவுக பிறகும் மகப்பேற்றுக்குப் பிறகும் உண்டாகிறது. ஆரம்பத்தில் இரண்டொரு மாதங்களுக்குச் சூதகத்தடை உண்டாகி, பெரும்பாடு காணும், நாட்கணக்காகவும், வாரக்கணக்காகவும் பெரும்பாடு நடக்கும். சிலருக்கு அதிக அளவு குருதி வெளியாகும்.

முடிவு பூப்பு வயதில் ஏற்படும் பெரும்பாடு :

முடிவு பூப்பு உண்டாகும் காலத்தில் பெரும்பாலும் மகளிருக்குத் திடீரென்று ஒருவித மாறுபாடில்லாமல் பூப்பு நின்றுவிடும். இக்காலங்களில் சிலருக்குப் பூப்புக்காலம்நீடிக்கும் அல்லது பூப்புச் சுழற்சி நீண்ட காலமாகும். சிலருக்குப் பூப்புக் காலம் குறைந்தும் குருதிப் போக்குக் குறைந்தும் படிப்படியாகப் பூப்பு நிகழ்வு நின்று விடும்.

முடிவு பூப்புக் காலங்களில் பெரும்பாடு உண்டாவது சர்வ சாதாரணமாக உள்ளது. அப்பெரும்பாடு ஒழுங்கற்ற பெரும்பாடாகும். பூப்புக் காலம், பூப்புச்சுழற்சி, குருதி அளவு ஆகியவைகள் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். திட்ட வட்டமாக எதையும் ஒழுங்காக அனுசரிக்காது.  ஒதற்கு காரணம் சினைப்பைச் சத்து ஊக்குவி இல்லாமலிருப்பதே ஆகும்.

கருப்பை சளிச் சவ்வின் சிற்சில பாகங்கள் தடிப்புற்றும், சில உதிர்ந்தும் சில சுருங்கியும் காணலாம். இவ்வகையான பெரும்பாடுகளில் கருப்பைச் சுரண்டல் சோதனை செய்ய வேண்டும். இச்சோதனையால் புற்று நோயின் தொடர்பைக் களைந்து ஒழுங்கற்ற பெரும்பாடு என்று உணர்ந்து அதற்கான மருந்துகளை வழங்க வேண்டும்.

முத்தோச வேறுபாடு

*வாதம் பகைத்து உண்டாகும் பெரும்பாட்டில் துவாலை துணியில் மஞ்சணிறத்தைக்காட்டும்.

*பித்தகோபத்தால் உண்டானால் செந்நிறத்தையும்,

* ஐயகோபத்தாலுண்டாயின் வெளிறியும் இருக்கும்.

பெரும்பாட்டு ரோகத்திற்கான சிகிச்சை முறைகளாவன

இதற்குப் பலவகையான மருந்துகள் இருக்கின்றன. தேக நிலையை கொண்டு ஒருவருக்குக் குணம் தரும் மருந்து மற்றொருவருக்குக் குணம் தருவதில்லை.

1. 10 கிராம் நாவல் பட்டையை இடித்து 200 மில்லி நீர் விட்டு அடுப்பேற்றி 50 மில்லி ஆனவுடன் வடிகட்டி தினமும் இருமுறை கொடுக்க வேண்டும்.

2. 10 கிராம் அசோகுப் பட்டையை ஒன்றிரண்டாய் இடித்து 200 மி.லி. நீர்விட்டு 50 மி.லி ஆனவுடன் வடிகட்டி தினம் இருவேளை கொடுக்க வேண்டும்.

3. நாவல் பட்டை, அத்திப்பட்டை, ஓதியம் பட்டை, அரசம் பட்டை, வேலம் பட்டை, இவைகளைக் கொண்டுவந்து அழுக்கடைந்த பாகத்தை நீக்கிவிட்டு, சுத்தமான பட்டையாக வகைக்கு அரைப்பலம் எடுத்து, இடித்து தூள் பண்ணி வடிகட்டி எடுத்து, அந்தத் தூள் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு வறுத்த பச்சரிசி மாவையும் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டியளவு காலை மாலை ஏழு நாள் சாப்பிட்டு வர பெரும்பாடு குணமாகும்.

4. பருத்தியிலையை இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி 30மிலி எடுத்து, அரைத் தேக்கரண்டியளவு பசு வெண்ணெய்யும் சேர்த்துக் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.

5. தும்பை இலையை அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயில் கலந்து காலையில் மட்டும் 7 நாள் சாப்பிட்டால் குணமாகும்.

6. 50 கி தொட்டால்சுருங்கி செடியை எடுத்து நன்றாக இடித்து 200 மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து நான்கில் ஒன்றாக வற்ற வைக்கவும். அதில் 30-60 மிலி குடிநீரை நோய் நிலைக்கு தக்கவாறு எடுத்து கொள்ளலாம்.

7. அதிக மாதவிடாய் குருதிப்போக்கிற்கு நாவல் பட்டையையை பொடியாக அரைத்து மோரில் அல்லது தயிரில் கலந்து அருந்தும் வழக்கம் தமிழ்நாட்டு மக்களிடம் பலன் தருவதாய் உள்ளது.

இந்த வீட்டு வைத்தியம் அருந்துவதற்கு எளிமையான வடிவில் “புலிப்பாணி வைத்தியம் 500” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

“பெரும்பாடு எனும் அதிக மாதவிடாய் குருதிப்போக்கிற்கு நாவல் பட்டையை எருமை மோர்விட்டு நன்கு இடித்து பிழிந்த சாறினை மூன்று நாள் அருந்த கட்டுப்படும்”

பெரும்பாட்டிற்கு (heavy menstrual bleeding) பெருமருந்து ஓதியம் பட்டை, நாவல் பட்டை, மாம்பட்டை, மொந்தன் வாழைப்பூ, இளம் தென்னம் பாளை இவற்றை ஒன்றிரண்டாக இடித்து குடிநீர் தயார் செய்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க மிகச்சிறந்த பலன் அளிக்கும். ஒரு வாரம் கொடுக்க வேண்டும்.

8. கருவேலம் பட்டை, அசோகம் பட்டை, நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், மாதுளை ஓடு, வில்வ ஓடு, ஆவாரம்பிசின் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு வாங்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். மாதவிடாய் ஐந்து நாட்களுக்கும் மேலாக நீடித்தால் இந்த மருந்தைச் சாப்பிட்டு வரலாம். காலை – மாலை ஒரு தேக்கரண்டி அளவு பொடியை மோருடன் கலந்து சாப்பிட்டால், அதிக உதிரப்போக்கு எனப்படும் பெரும்பாடு நோய் குணமாகும்.

9. ஒரு முழு வாழைப்பூவின் சாறு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் மோர் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடித்து வந்தால், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலியும், இரத்தப்போக்கும் குணமாகும்.

10. நற்சீரகம், அதிவிடயம், திப்பிலி, ஓமம், மாசிக்காய், ஆவரைவித்து, மேற்படி  சம அளவு கொண்டு தூள்செய்து புழுங்கலரிசி மாவுடன் கலந்து அடைசுட்டு நல்லெண்ணெயிற் தோய்த்துத் தின்னப் பெரும்பாடு தீரும்.

சித்த மருந்துகள்

1. படிகப் பூங்காளிச் செந்தூரம் 1/2 முதல் 1 கிராம் 1/2 டம்ளர் பசுமோருடன் தினம் இருவேளை கொடுக்கவும்.

2. வெண்பூசணி லேகியம் 5 முதல் 10 கிராம் தினம் இருவேளை அரை டம்ளர் பாலுடன் சாப்பிடவும்.

3. கொம்பரக்கு சூரணம்

4. மருதம்பட்டை சூரணம்

5. இம்பூரல் வடகம்

6 வாழைப்பூ வடகம் போன்ற மருந்துகள் உள்ளன.

மருத்துவ அறிவுரைகள் :

இளஞ்சூடான, காரம் குறைந்த உணவுகள், துவர்ப்பான உணவுப் பொருட்கள், வாழைப்பூவை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளல், ஓய்வு அவசியம்.

குறிப்பு: சித்தா மருத்துவ முறையானது நோயாளியின் முழுமையான உடல் பரிசோதனை, நாடி நோயறிதல் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் முற்றிலும் தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சுய மருந்துக்கும் முன் தயவுசெய்து அருகிலுள்ள சித்த மருத்துவரை அணுகவும்.